2.4 மதுரையின் சிறப்பு
 

சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்தில் பூம்புகார் நகரின் சிறப்பை விளக்கிய இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தில் மதுரை மாநகரின் சிறப்புகளைக் கூறுகின்றார்.
 

மதுரை மாநகரம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரக்கூடிய சிறப்புக் கொண்டது என்பதை உணரும் வகையில் பலவாறாக மதுரையின் வளமும் பெருமையும் பேசப்பட்டுள்ளன. கோவலன், மதுரை மாநகர் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று பாணர்களிடம் கேட்கிறான்.  அதற்குப் பாணர்கள்,  ‘பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களின் மணமும் மலர்களின் மணமும்,  சமையலறையின் தாளிதப் புகையும், அப்பம், மோதகம் ஆகியவற்றைச் சுடும் புகையும், மக்கள் பயன்படுத்தும் அகிற் புகையும், ஆகுதிப் புகையும்,  அரண்மனையின் நறுமணக் கலவைகளும் கலந்து மதுரைத் தென்றல் வீசியது பாருங்கள்; அருகிலேயே மதுரை உள்ளது’ என்கிறார்கள்.
 

பொதியில் தென்றல் போலாது, ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்!
நனி சேய்த்து அன்று அவன் திருமலி மூதூர்.

(புறஞ்சேரி இறுத்த காதை, 131-133)
 

மதுரையின் செல்வ வளத்தை நெருங்கிக் கண்களால் காண்பதற்கு முன்னரே நாசியினாலும் வெகு தொலைவிலிருந்து உணர்ந்துகொள்ளலாம் என்பது எத்தகைய அழகான வெளிப்பாடு!.
 

மேலும் சற்று நெருங்கும் போது மதுரையின் சிறப்பு,  ஒலிகள் மூலமாகச் செவிக்கு எட்டுகிறது என்பதைக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.
 

கோவலன்,  கண்ணகி,  கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குள் நுழைகிறார்கள்.  அப்போது சங்கரன் கோயிலிலும் அரண்மனையிலும் முழங்கும் பல்வகை வாத்திய ஓசைகள்,  காலை முரசம் பெரிதாக முழங்கும் ஓசை, அந்தணர் வேதம் ஓதும் ஓசை, யானைகளின் பிளிறல் ஒலி, குதிரைகளின் கனைப்பு ஒலி,  மள்ளர்கள் பாட்டின் ஒலி மற்றுமுள்ள ஆரவாரங்கள் அம்மூவரையும் எதிர்கொண்டு வரவேற்றது செவிக்கு விருந்துதானே! 
 

அடுத்து,  மதுரையின் நீர்வளமும் நிலவளமும் செல்வ வளமும் கண்ணுக்கு விருந்தாக அமைவதைக் காட்டுகிறார்.   மதுரையின் சிறப்புக்கு அணிகலனாக வையை ஆற்றினை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கூறுகிறார் இளங்கோ. பல்வேறு மலர்கள் பூத்த ஆற்றின் கரைகளையும் ஆற்றிடைக் குறைகளையும் பெண்ணின் அங்கங்களாக உருவகப்படுத்தியுள்ளார். கரையின் முருக்க மரம் உதிர்த்த சிவந்த இதழ்கள் பெண்ணின் செவ்விதழ்;  முல்லை மலர்கள் பல்வரிசை;  ஓடும் கயல் மீன்கள் நெடுங்கண்கள்;  கருமணல் கூந்தல் என்று கூறி வையை என்னும் குலக் கொடியானவள் நறுமலர் ஆடைகளால் தன் மேனியைப் போர்த்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
 

மதுரைக்கு வந்த மூவரும் மேலோர் வாழும் சிறப்பு மிகுந்த மதுரையை வலம் வந்தால் மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் என அகழியைச் சுற்றிப் போயினர் என்று கூறியுள்ளதும் உணரத் தக்கது.
 

வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தான் நனி பெரிதும் தகவு உடைத்து. 

(புறஞ்சேரி இறுத்த காதை, 181-182)
 

மதுரையின் புறஞ்சிறை மூதூர் வயல்களும் பொழில்களும் உடையதாகவும் நீர் வளம் கொண்டதாகவும் மரங்கள் நிறைந்ததாகவும் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் இளங்கோவடிகள்.
 

கோவலன் மதுரை மாநகரைச் சுற்றிப் பார்க்கும் இடங்களில் மதுரையின் செல்வ வளத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  இந்திரனின் பெட்டகத்தினைத் திறந்து வைத்தாற் போல நகரம் வளமுடன் விளங்கியது. வீதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பினைப் பெற்றிருந்தன.   அங்காடி வீதியில் பல வகை வண்டிகள், வெண் சாமரை, பன்றிமுகக் கடகம், முத்துப் பதித்த குத்துக்கோல், தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை கிடைத்தன.
 

வைரம்,  மாணிக்கம்,  வயிடூரியம்,  நீலம்,  கோமேதகம் போன்ற மணிகள் விற்கும் இரத்தினக் கடைவீதி, சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னும் விற்கும் பொன் கடைவீதி,  பருத்தி நூலினாலும் மயிரினாலும்,  பட்டு நூலினாலும் நெய்யப்பட்ட துணிகள் விற்கும் துணிக்கடை வீதி,  மிளகு,  பல் வகைத் தானியங்கள் விற்கும் கூலவீதி ஆகிய வீதிகள் அரசர், செல்வந்தர்,  மக்கள் என அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் நிறைவு செய்யும் செல்வ வளம் நிறைந்தனவாகத் திகழ்ந்தன.  அது கோவலனின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது அவன் கவுந்தியடிகளிடம் கூறும் கூற்றுகளிலிருந்தும் தெரியவருகிறது.